Tuesday, April 14, 2009

''எழுக! இளைஞர் சக்தி!'

Junior Vikatan 19/04/2009 issue article for your view,

'இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலத் தைத் தீர்மானிக்கப் போகிறார்கள்...' -- அரசியல்வாதிகள் அடிக்கடி உதிர்க்கிற ஒரு பஞ்ச் டயலாக் இது! என்னதான் அரசியல் தலைவர்கள் ஆசை காட்டினாலும், இளைஞர்கள் அரசியலை நோக்கி வருவது பெருமளவில் குறைந்துவிட்டது என்பதே உண்மை. இன்றைய இளைஞர்களுக்கு அரசியலை விடவும், தங்களுடைய எதிர்காலத்தின் மீதுதான் அதிக அக்கறை. அதனால்தான் அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள வாக்காளர்களில் சுமார் 24 சதவிகிதம் இளைஞர்கள்-- அதாவது, சுமார் 18 கோடி வாக்காளர்கள் இளைஞர்கள். அவர்கள் பெரும்பாலும் எந்தக் கட்சியையும் சாராதவர்களாக இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். இவர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இவர்களுடைய வாக்குகளை ஈர்க்கும் விதமாக ஒவ்வொரு கட்சியும் புதியபுதிய டெக்னிக்குகளைக் கையாண்டு வருகின்றன. அதில் ஒன்று இணையம். எல்.கே.அத்வானி முதல் நம்முடைய உள்ளூர் அரசியல் தலைவர்கள் வரை இன்று பலரும் இணை யத்தைப் பயன்படுத்தி இளைஞர்களை வசீகரிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் ஏதேதோ வாக்குறுதிகளை அளித்த போதிலும், இளைஞர்கள் அவர்களை நோக்கிப் போகாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலான இந்திய சுதந்திரம் இளைஞர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அதிகரிக்கவே உதவியிருக்கிறது. நம்மு டைய நாட்டை ஆண்ட அரசியல் தலைவர்களும், தாம் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாத காரணத்தால், மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தேவை நல்ல கல்வி, கௌரவமான சம்பளத்துடன் கூடிய
வேலைவாய்ப்பு. இதை நம்முடைய ஆட்சியாளர்கள் உருவாக்கித் தருவார்கள் என்ற நம்பிக்கை இன்றைய இளைஞர்களுக்குக் கொஞ்சமும் கிடையாது.
நம் நாட்டு இளைஞர்களின் எதிர்காலமே இருண்டு போய் விடக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமாகி வருவதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் அக்கறை காட்டவில்லை. உலக அளவிலான பொருளாதார மந்தநிலை காரணமாக, இந்தியப் பொருளாதாரமும் ஆட்டம் கண்டிருக்கிறது. இதனால் பெருமளவிலான வேலை இழப்புகளை நம் நாடு சந்தித்து வருகிறது. படித்துவிட்டு வேலையில்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே அலைந்து கொண்டிருக்கும் நிலையில், இருக்கிற வேலையும் பறிபோய்விடும் என்கிற அச்சுறுத்தல் வேறு இப்போது அதிகரித்திருக் கிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கிய தகவல் தொழில் நுட்பத் துறை, இன்று கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்தத் துறை யில் வேலை பார்த்துவந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், வேலையை இழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 75,000 பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையை இழக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது. ஐ.டி. துறை, அது சார்ந்த பி.பி.ஓ. துறை ஆகியவற்றில்தான் இத்தகைய வேலை இழப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன.
பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும்போதே பெரியபெரிய ஐ.டி. நிறுவனங்கள் நேரடியாக வந்து கேம்பஸ் இன்டர்வியூக்களை நடத்தி, தமக்கான ஆட்களை தேர்வு செய்துகொண்டு போன நிலை... இப்போது இல்லை. கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்குக்கூட இன்னும் வேலைக்கான உத்தரவு வந்து சேர வில்லை. வேலை கிடைத்துப் போனவர்களும், சரியான பிராஜெக்ட் இல்லாததால் வெறுமனே உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள். பல முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
பிளஸ்-டூ படித்ததும் முன்னணிக் கல்லூரி களில் ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று நன்கொடை கொடுத்தாவது தம்முடைய பிள்ளைகளை சேர்த்து விட்டால், அவர்கள் படித்து முடித்தவுடன் கைநிறைய சம்பளத்தோடு நல்ல வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், தம்முடைய பிள்ளைகளை கடன் வாங்கிக் கல்லூரிகளில் படிக்கவைத்துக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, இன்றைய பொருளாதாரச் சூழல் கடுமையான அடியைத் தந்திருக்கிறது. கடந்த 2008 மார்ச் மாதம் வரை பெங்களூருவில் இருக்கும் ஐ.டி. துறையில் ஐந்தரை லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அதில் கால்வாசிப் பேர் ஆண்டுக்கு ஐந்து லட்சத்துக்கும் குறையாமல் சம்பளம் வாங்கி வந்தார்கள். அவர்களெல்லாம் இன்று தம்முடைய வேலை நீடிக்குமா... நீடிக்காதா... என்று தெரியாமல் மனம் கலங்கி நிற்கிறார்கள்.
ஐ.டி. மற்றும் பி.பி.ஓ. துறைகளில் நேரடியாக ஒருவர் வேலை செய் தால் அவரையட்டி சுமார் ஆறு பேராவது வேலைவாய்ப்பைப் பெற்றுவந்தார்கள். இதன்படி பார்த்தால், இப்போது ஏற்படும் ஒவ்வொரு வேலை இழப்பும் மறைமுகமாக மேலும் ஆறு பேருடைய வேலை இழப்புக்கு இட்டுச்செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஐ.டி. துறையையட்டி வளர்ந்து வந்த பிற துறைகள், குறிப்பாக ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் முதலான துறைகள் இன்று கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. இது ஒரு விஷச்சுழலைப் போல இந்தியப் பொருளாதாரத்தை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.
இத்தகைய மோசமான சூழலில்தான் இந்திய நாடாளு மன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இளைஞர்களிடம் சென்று 'இந்தத் தேர்தலில் உங்களுடைய பிரச்னையாக எதை முன்வைப்பீர்கள்?' என்று கேட்டால், வேலைவாய்ப்பைத்தான் முதலில் சொல்வார்கள். நல்ல கல்வி வேண்டும், மகிழ்ச்சிகரமான வாழ்க்கைச்சூழல் வேண்டும், நல்ல போக்குவரத்து வசதிகள் வேண்டும், ஊழலற்ற நிர்வாகம் வேண்டும், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பவைதான் இன்றைய இளைஞர்களின் முன்னுரிமைகளாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வழங்காத காரணத்தால்தான், இளைஞர்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது.
இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக இருக்குமென்று இளைஞர்கள் எல்லோருமே ஒப்புக்கொள்கிறார்கள் என்ற போதிலும், அதை வழங்கக்கூடிய அரசியல் தலைமை இன்று இல்லை என்றும் அவர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். அண்மையில் பி.பி.சி. நிறுவனம் இந்திய இளைஞர்கள் பங்குபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்தத் தேர்தல் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, பெரும்பாலான இளைஞர்கள் நம்முடைய பாதுகாப்புக் கொள்கை குறித்து அக்கறையோடு கருத்துகளைக் கூறினார்கள்.
''பாதுகாப்பு என்பது போலீஸ§ம், ராணுவமும் வழங்குகிற பாது காப்பு என்று மட்டும் அர்த்தமாகாது. பொருளாதாரப் பாதுகாப்பு மிக முக்கியமானது. அது வேலைப் பாதுகாப்போடு தொடர்பு கொண்டிருக்கிறது!'' என்று அவர்களில் சிலர் குறிப்பிட்டார்கள். இது முக்கியமான ஒரு கருத்தாகும்.
நம்முடைய அரசாங்கம் பாதுகாப்புக்கான செலவு என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஒதுக்கி வருகிறது. அந்தத் தொகையில் பத்தில் ஒரு பங்கு தொகை இருந்தாலே... லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு கௌரவமான வேலைவாய்ப்புகளை அளித்துவிட முடியும். ஆனால், நம்முடைய ஆட்சியாளர்கள் அதுபற்றி கவலைப்படுவதில்லை. உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், பொருளாதாரப் பாதுகாப்புக்கும் இடையே உள்ள உறவை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் இதற்குக் காரணம்.
இந்தியாவில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை நல்ல முறையில் பயன் படுத்திக்கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கர்நாடகத்துக்கு அடுத்தபடியாக ஏராளமான வேலைவாய்ப்புகளை இந்தத் துறையில் தமிழகம் உருவாக்கியது. உலகப் புகழ்பெற்ற ஐ.டி. நிறுவனங்கள் பல தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்ததால், நம்முடைய இளைஞர்களுக்குப் பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. இதே சமயத்தில் இங்கே பெருகிவந்த பொறியியல் கல்லூரிகள் உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் நம்முடைய இளைஞர்கள் போட்டியிடுவதற்கு வழி அமைத்துத் தந்தன. ஆனால், இந்திய அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, தமிழக ஐ.டி. துறையிலும் எதிரொலித்து வருகிறது.
இன்று தேர்தலை எதிர்நோக்கியுள்ள அரசியல் கட்சிகள், தமிழக இளைஞர்கள் சந்தித்து வருகிற இந்த வேலைவாய்ப்பு தொடர்பான சிக்கலை எப்படித் தீர்க்கப்போகின்றன? இதற்கென குறிப்பான திட்டங்களை அவை உருவாக்கியுள்ளனவா? பொறியியல் கல்லூரிகள் ஏராளமாக இருக்கிற நிலையில், இங்கே படித்துப் பட்டம் பெறுகிற இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்குச் செல்லவேண்டிய நிலை, ஏற்கெனவே இருந்து வந்தது. இப்படியான உள்நாட்டு குடிப்பெயர்வு காரணமாக, நம்முடைய மாநிலத்தின் மனிதவள ஆற்றலை நாம் இழந்து வந்தோம். அது மேலும் மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கும் சூழலில், அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை நம்முடைய அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது!
நம்முடைய மாநிலத்தில் பொறியியல் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெறும் மாணவர்களில் சுமார் இருபத்தைந்து சதவிகிதம் பேர்தான், வேலை பெறத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள் என்று ஏற்கெனவே சி.ஐ.ஐ. மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பொறியியல் கல்வியை சீர்படுத்தி, மாணவர்களின் தரத்தை அதிகரிக்கச் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொறியியல் கல்வி இவ்வளவு மோசமாக இருப்பதற்கு, பொறியியல் கல்லூரிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாததும் ஒரு முக்கியமான காரணமாகும். தற்போது ஐ.டி. துறையில் ஏற்பட்டுள்ள சரிவை ஒருவிதத்தில் சாதகமாக நாம் திருப்பிவிட முடியும். தகுதியான ஆசிரியர்களைப் பொறியியல் கல்லூரிகளுக்கு நியமிக்க இந்தச் சூழலை பயன்படுத்திக்கொள்ளலாம். நல்ல சம்பளம் வழங்க முன்வந்தால்... திறமையான இளைஞர்கள் ஆசிரியப் பணியை நோக்கி வருவதற்கு தயாராகவே இருக்கிறார்கள். லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் சுயநிதி பொறியியல் கல்லூரியினர் இதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அவர்களை நிர்ப்பந்தித்துத்தான் இதைச் செய்யவைக்க முடியும். அரசியல் கட்சிகள் நினைத்தால், இது சாத்தியம்தான்.
இளைஞர்கள் தமக்கான பிரச்னையை முன்வைத்து விவாதிப்பதற்குப் பொருத்தமான களம் எதுவும் தமிழகத்தில் இல்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. அப்படியான வாய்ப்பு இல்லாத நிலையில், அவர்களுடைய பிரச்னைகளை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள முடியாமலேயே போய்விடுகிறது. இந்த இடைவெளியை நிரப்புவதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற முடியும். அது போலவே தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதுகுறித்த விழிப்பு உணர்வை பரவலான தளங்களுக்கு எடுத்துச்செல்ல முடியும். ஆனால், அப்படியான முயற்சி எதுவும் இதுவரை இங்கு நடைபெறவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
தமிழக இளைஞர்கள் தம்முடைய பிரச்னைகளை வெளியே சொல்லமுடியாமல் மனத்திலேயே போட்டுப் புழுங்கிக்கொண்டு தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கி நிற்பார்களேயானால், அது அவர்களுக்குத்தான் நட்டம். 'அரசியல் மோசம்... அரசியல்வாதிகளெல்லாம் மோசம்... எல்லா இடங்களிலும் ஊழல் நிறைந்து விட்டது...' என்று புலம்பிக்கொண்டிருப்பதால், எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. தமக்கான பிரச்னைகளை முன்னிறுத்தவும், அவற்றைத் தீர்க்கவேண்டும் என வலியுறுத்தவும் இளைஞர்கள் முன்வர வேண்டும். 'இளைஞர்கள் எவரும் எங்களை அணுகவில்லை. எனவே, நாங்கள் என்ன செய்வது?' என்று சொல்லி அரசியல் கட்சிகள் தப்பித்துக்கொள்ள முடியாது. இளைஞர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை தராவிட்டால், இந்த அரசியல் கட்சிகள், இளைஞர்களின் ஆதரவை மட்டுமல்ல... மற்றவர்களின் ஆதரவையும்கூட பெறுவது சந்தேகம்தான்!

2 comments:

  1. Makka yellarum ungal view va post pannugappa

    ReplyDelete
  2. Hi Kathir,
    Where u copied this?
    I also wanted to put like this in my blog...
    aNbUdAn EnDrUm,
    Muthu Vasanthan
    ...ஆங்கொரு ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
    www.abhi-india.org
    To restore every child's right to education

    ReplyDelete